கிருமி ராஜ்ஜியம்

1900’களில் நல்லா இருக்கிற மனிதர்கள் திடீர்ன்னு வரும் காய்ச்சல், வயிற்று போக்குகளால் ஸ்வாகா ஆகிக் கொண்டிருந்தனர். எதுக்கு சாவுறாங்கன்னே தெரியாம வைத்தியர்கள் குழம்பி கிடந்த நேரம். ஹிப்போக்ரேடிஸ் வேற மனிதர்களின் நோய்க்கு காரணம் விஷ காற்றுன்னு சொல்லி வச்சிருந்தார். இன்னோரு பக்கம் மதவாதிகள் டிசைன் டிசைனா காரணம் சொல்லி குழப்பி அடிச்சிட்டிருன்தாய்ங்க.

அதுக்கு சரியா 40 வருஷத்துக்கு முன்னாடி 1855 வாக்கில், லூயிஸ் பாஸ்டர்ங்கற ஃப்ரென்ச்கார், பால் ஏன்டா கெட்டு போகுதுன்னு மண்டையை பிச்சு ஒரு வழியா ஏதோ ஒன்னு பாலை கெட வைக்குது, அதை சூடு பண்ணா கெட்டு போகலைன்னு கண்டு பிடிச்சு வச்சிருந்தார். ‘வைன்’ கெட்டு போறதையும் அவரால தடுக்க முடிஞ்சது. அப்போதைய ஹீரோ அவர் தான்.

திரும்ப 1900’க்கு வந்தா ஏதோ ஒரு காய்ச்சலில் ஆடு, மாடு, மனிதர்கள்ன்னு அத்தனையும் காலி ஆகிட்டிருந்தது . இப்பவும் விஷ காற்று, கடவுளின் சாபம்ன்னு பீலா விட்டுகிட்டிருந்த மதவாதிகளுக்கு மத்தியில ராபர்ட் கோச்’ங்கிற ஜெர்மன்காரர், “இருங்கடா, பாஸ்டர் சொல்றதை வச்சு பார்த்தா கண்ணுக்கு தெரியாத கிருமி இருக்கும் போலிருக்கு. நான் ஆராய்சி பண்ணி சொல்றேன்”னு. ஆந்த்ராக்ஸ் என்னும் நுண் கிருமி இருப்பதையும், அது தான் அத்தனை சாவுக்கும் காரணம்ன்னும் கண்டு பிடிச்சார்.

மருத்துவ உலகத்துக்கு மிக பெரிய கண் திறப்பு மேட்டர் இது. அதுக்கு அப்புறம் மொத்த உலகமும் மூட நம்பிக்கைகளை விட்டுட்டு, நுண் கிருமிகளை பற்றி தெரிந்து கொண்டு அதை தீர்க்க ஆராய்ச்சி செய்ய துவங்கின. நடுவில உலகப்போர் வந்து அதனால பல்வேறு புது வியாதிகள் முளைச்சு மனிதனை கொத்து புரோட்டா போட்டது. அது “கிருமிகளின் ராஜ்ஜிய” காலம்.

இந்த பக்கமா 1928’ல் ஸ்காட்லாண்டுகாரர் ஃப்லெமிங், பேக்டீரியா பற்றி செய்திட்டிருந்த தன்னோட ஆராய்ச்சி சாம்பிள்களில் அழுக்கு படிஞ்சு, அதனால பேக்டீரியா எல்லாம் செத்து போச்சுன்னு அசிஸ்டன்ட்டை திட்டிட்டு யோசிச்சார்….. பேக்டீரியாக்களை சாகடிச்சது எதுடா?? அப்போ தான் பென்சிலின் பிறந்தது. ஆனால் அதை அப்படியே விட்டுட்டு அவர் வேற வேலையை பார்க்க போய்ட்டார்.

ஒரு 10 வருஷம் கழிச்சு 1938’வாக்கில் ஆக்ஸ்ஃபோர்டில் வேலை பார்த்த இரண்டு பேர், ஃபெலமிங் ஆராய்ச்சி பேப்பரை தூசி தட்டி, பென்சிலின் கிருமிகளை கொல்லுதுன்னு கன்ஃபார்ம் பண்ணினாய்ங்க. அந்த நேரம் பார்த்து ஆக்ஸ்ஃபோர்ட் மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளிக்கு பேக்டீரியா தொற்று காரணமா புண் ஆறல என்ன பண்ணாலாம்ன்னு யோசிச்ச ஒரு டாக்டர், இவங்க கிட்ட இருந்த பென்சிலினை வாங்கி புண் மேல பூசினார் . அதிசயமா அதுவரை கட்டுப்படாத புண் ஆற துவங்குச்சு ஆனா கை வசம் இருந்த பென்சிலின் போதாமல் ஆள் காலி.

1945’ல் தான் உறுதியா கிருமி நாசி’ன்னு ஒன்னை கண்டு பிடிச்சு கிருமிகளின் ஆயிரம் ஆண்டு ராஜ்ஜியத்துக்கு முற்றுப் புள்ளி வச்சாய்ங்க. அப்புறமா, மேலே சொன்ன எல்லோருக்கும் நோபல் பரிசை குடுத்தாங்க. இவ்ளோ பெரிய கட்டுரைக்கு காரணம் நோபல் பரிசு பெற்ற மேடையில் Dr.ஃப்லெமிங் சொன்ன வார்த்தைகள்…

” உயிர்களின் வாழ்க்கை வரலாற்றில், கிருமிகளை போல சாமர்த்தியசாலிகள் இல்லை. அவை இருபது நிமடங்களில் இரு மடங்காக பெருகுவதிலும் சரி, தங்களை காப்பாற்றிக் கொள்ள மரபணுக்களை மாற்றுவதிலும் சரி, படு வேகமாக செயல்படும். இதனால் வரும் காலங்களில், நாம் குடுக்கின்ற மருந்துகளையே எதிர்த்து நின்று ஜெய்த்து விடும்”ன்னு சொன்னார்.

அவர் சொன்னது போலவே 60 – 70 வருடங்களுக்குள் பென்சிலினை கிருமிகள் வென்று விட்டன. பென்சிலின் இன்று வேலை செய்வது இல்லை. அதனால் அதை விட பவரான ஆன்டி-பயாட்டிக்குகள் உபயோகிக்க ஆரம்பித்தாயிற்று.. அதுவும் இன்னும் எவ்ளோ நாளைக்கு என்று தெரியாது….

1987’க்கு பிறகு இந்தியாவில் எந்த ஆன்டி – பயாடிக்கும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருக்கின்ற ஆன்டிபையாடிக் அனைத்தையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ தவறாக பயன்படுத்தி கிருமிகளுக்கு ஊட்ட சத்து அளித்து வருகிறோம்.

2010’ல் எடுத்த புள்ளி விபரத்தின் படி 56 % பேர் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ஆன்டி – பயாடிக் சாப்பிடுபவர்கள். 2016’ல் இது 76 % ஆகி இருக்கிறது…. எவ்ளோ சீக்கிரமா எல்லோரும் டாக்டர் ஆகிட்டிருக்கோம் பாருங்க.

இன்றைய நிலைமை.. இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 461 பேர் மருந்துகள் வேலை செய்யாமல் இறக்கிறார்களாம். பூச்சி கொல்லிகள் கேக்காத நிலையில் மீண்டும் ஒரு கிருமிகள் ராஜ்ஜியம் நடை பெற கூடும்.

கொத்து கொத்தாக சாகலாம். 😉 😉

Leave a comment